இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளிததுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தனியார்துறையின் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, கடந்த வருடம் 750 மில்லியன் டொலர் சலுகைக் கடன்களை வழங்கியது.
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு 2 பில்லியன் டொலர் கடன் உதவி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுப்பரவல் காரணமாக பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கும், மனித வள அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மொத்த எரிசக்தி உற்பத்தியில் 70% ஐ அடைவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு ADB உதவியையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
அத்துடன் கொவிட் தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கியதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|