இலங்கையர்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதை குறைக்க முடிவு!
Thursday, June 2nd, 2016இலங்கையர்களை பணிப் பெண்களாக வெளிநாட்டுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை படிப்படியாக நிறுத்த, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீட்டுப் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதனால் ஏற்படக் கூடிய உரிமை மீறல்கள், சமூக சீரழிவுகள் மற்றும் உள்நாட்டில் ஏற்படும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பணிப் பெண்களாக செல்வோர் உட்பட வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு ஓர் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைப்பதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப் பெண்களை அனுப்புவதனை குறைப்பது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள், பாலியல் பலாத்காரங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற பல சம்பவங்கள் பணிப் பெண்களின் குடும்பங்களில் இடம்பெறுவதாகவும், உள்நாட்டில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டே அரசாங்கம் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.
.
Related posts:
|
|