இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – திருத்தியமைக்கப்படுகிறது ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் – அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 29th, 2021

இலங்கையில் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50 ஆகவும் ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55 ஆகவும் இருக்கின்றது.

இலங்கையர்களின் ஆயுட்காலத்தை அடிப்படையாக கொண்டே ஓய்வூதிய வயதை அதிகரிப்பது காலத்திற்கு பொருத்தமானதென்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதிற்கு ஒரு முறையான காலஎல்லை காணப்படவில்லையென்பதையும் அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கிணங்கவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படகின்றது என தெரிவித்த அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா அதற்கிணங்கவே ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: