இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் – சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!
Wednesday, February 24th, 2021ஐ நா மனித உரிமை பெரவையில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது, அத்துடன் அது நிறைவேற்றப்பட முடியா விடயங்களை உள்ளடக்கியது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜெனீவா அமர்விற்கான இணையவழி ஊடான உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது. இதுவே 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களைப் புதுப்பிக்கும் நிலைக்கு தேசிய பாதுகாப்பை இட்டுச் சென்றதுடன், இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இலங்கை மக்கள் இந்தத் தீர்மானத்தை நிராகரித்தமையானது, 2019 நவம்பரில் அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிய ஆணையின் மூலம் தெளிவாக வெளிப்பட்டது.
இந்த ஆணையின் அடிப்படையில் இந்த சபையின் 43வது அமர்வில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக அறிவித்தேன்.
இந்த சபை உட்பட ஐ.நா. அமைப்புடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் நான் வெளிப்படுத்தினேன்.
கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களை இலங்கை எதிர்த்துப் போராடியபோதிலும், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், நாங்கள் ஆகஸ்ட் 2020 இல் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடாத்தி, ஆசியாவின் மிகப் பழமையான நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் ஒன்றான எமது நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அந்தவகையில் இந்த தீர்மானம் எங்கள் நாட்டிற்கு எதிரானது. அந்த தீர்மானம் நிறைவேற்றமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது. மேலும் அந்த தீர்மானங்கள் இலங்கையின் அரசமைப்பிற்கு முரணாணவையாக காணப்படுகின்றன.
இந்த சபையின் அவசரமான கவனத்தை ஈர்க்கும் ஒரு சூழ்நிலையை இலங்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா என்பது குறித்து தமது சொந்தத் தீர்ப்பை வழங்குவதற்காக இந்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர் அரசுகளுக்கு நான் விட்டு விடுகிறேன்,
அல்லது இந்தப் பிரச்சாரம் அடிப்படையில் ஒரு அரசியல் நடவடிக்கையாக இருக்குமாயின், இந்த சபை நிறுவப்பட்ட மதிப்புக்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது. குறிப்பாக சில நாடுகளால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வழக்குத் தொடுப்பதில் இருந்தும் தமது வீரர்களைப் பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றப்படும் நேரத்தில், தமது நோக்கங்களின் போலி மற்றும் பாசாங்குத்தனமான தன்மையை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே கணிசமான மன உறுதியை இழக்கச் செய்கின்றது எனவும் சுட்டிக்காட்டிய அவர் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்ட போதிலும் இலங்கைக்கு எதிரான குழுக்கள் வேறு நாடுகளுக்கு தேவையான பிரேரணையொன்றை சமர்ப்பிக்கின்றமை வருத்தத்திற்குரியதுவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரேரணைக்கு எதிராக அணிதிரளுமாறு வெளிவிவகார அமைச்சர் சர்வதேச நாடுகளிடம் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமைகும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|