இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

இலங்கைக்கு துருப்பினர் அனுப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜபக்ஷர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள்.
இவ்வாறான நிலையில், அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் சுப்ரமணியம் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|