இலங்கைக்கு இந்தியா இதுவரை 23,000 கோடி கடனுதவி – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை!

Thursday, May 5th, 2022

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 03 பில்லியன் டொலர்களை  அதாவது சுமார் 23,000 கோடி கடனுதவியாக வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உணவு,  மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்ய இலங்கைக்கு 01 பில்லியன் டொலர் வரை கடனுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க இந்தியா முன்வந்தது. இந்தக் கடனை தேவைப்படும்போது இலங்கை பெற்றுக் கொள்ளும் வகையில், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ளது.

கூடுதலாக அரிசி, மருந்துகள், தொழில்துறை மூலப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் இந்திய கடனுதவியின் கீழ் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற எரிபொருட்களை கொள்முதல் செய்ய தனியாக 500 மில்லியன் டொலர் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்தது. இது வெவ்வேறு வகையான எரிபொருள் அடங்கிய 09 சரக்குத் தொகுப்புகளை இலங்கைக்கு விநியோகிக்க வழிவகை செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து இதுவரை சுமார் 04 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் விரைவில் இலங்கை வந்து சேரவுள்ளது. கடந்த மே 02 ஆம் திகதி எரிபொருளுக்கு கூடுதலாக 200 மில்லியன் டொலர் கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்தது. இதுதவிர, எரிபொருள் கொள்முதலுக்கு 500 பில்லியன் டொலரை குறுகிய கால கடனாக இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இலங்கைக்கு சுமார் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது. தமிழ்,சிங்கள புத்தாண்டின்போது நல்லெண்ண அடிப்படையில் கூடுதலாக 11,000 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 03 பில்லியன் டொலர்கள் அதாவது சுமார் 23,000 கோடி கடனுதவி அளித்துள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: