இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கையின் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்திவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை சீனா எப்போதும் வழங்கியது என சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கை தொடரும் என உறுதியளித்துள்ளார்.

சீனாவிடமிருந்து புதிதாகக் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரளவிற்கு முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகவும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: