இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் – குடியரசு தின செய்தியில் இந்தியா தெரிவிப்பு!
Tuesday, January 26th, 2021வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றிலும் இலங்கைக்க உதவுவதற்கு உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 72 ஆவது குடியரசுத் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து பணியாற்றி சமகால பொருளாதார மற்றும் ஏனைய சவால்களை வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் சவால்கள் இருந்தபோதிலும், செப்டம்பர் 26 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு உச்சிமாநாடு மற்றும் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையே ஏராளமான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தனி சந்திப்புகளை மேற்கொண்டார்.
இவை அனைத்தும் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவின் சவால்களிற்கு மத்தியிலும் இருதரப்பினாலும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியை பேணியுள்ளோம் என்பதைக் காட்டுகின்றன என தெரிவித்துள்ள அவர், இணையவழி பேச்சுவார்த்தைகள் இரு தரப்பு உறவுகளை மேலும் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்துள்ளன என்றும் கூடிய விரைவில் மருந்துகளை விநியோகிப்பதன் மூலம் இந்த ஈடுபாட்டை எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் ஆழமாக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இதேவேளை 72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|