இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகின்றோம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, June 14th, 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இலங்கையின் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன்தான் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதை நீக்குவதா? இல்லையா? என்பதை இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்க முடியாது.

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றபடியால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும், அதற்குத் துணைபோனவர்களையும் கைது செய்தோம்; தற்போதும் கைது செய்து வருகின்றோம்.

இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்.

சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: