இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐ.நாவின் பொறுப்பு – ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021

வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் இலங்கையில் இடம்பெறாதென்பதை உறுதிப்படுத்த தமது அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை கட்டியெழுப்ப உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காலில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

பயங்கரவாதம் என்பது உலகளாவிய சவால் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கடும்போக்குவாத மத ரீதியிலான பயங்கரவாதிகளினால் ஏற்பட்ட அழிவை இலங்கை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கை மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் என்பது உலகளாவிய சவால் எனவும் அதனை வெற்றிகொள்வதற்காக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்ற விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டு பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை புதிய வைரஸ் பிறழ்வுகள் பரவுவதை தடுப்பதற்காக தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் மற்றும் அது சார்ந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் தெரிவித்த ஜனாதிபதி, இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்ற தயாராகவிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.

இது, 2030 இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை முடக்குவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்வும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, உணவு கட்டமைப்பு மாநாட்டில் இன்று கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார்.

நாளை (24) நடைபெறவுள்ள வலுசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: