இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சிவநேசன்!

Wednesday, January 17th, 2018

இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு எம்மிடம் வாக்குக்கேட்டு வெற்றியைத் தமதாக்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இதுவரையில் எமக்கு எதுவிதமான அனுகூலங்களும் கிடைக்கவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சிவநேசன் கூட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வேட்பாளர்களைக் கூட இறக்குமதி செய்து அதனூடாக வெற்றிகளை தமதாக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறாக இறக்குமதி செய்பவர்களுக்கு மக்களாகிய நாம் போர்க்காலப்பகுதியில் அனுபவித்த துன்ப துயரங்களின் வலிகளை அறிந்திராதவர்கள் என்பதே உண்மையானதாகும்.

அவர்களிடம் எமது மக்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அவர்களுக்கு அதன் தாக்கங்களை உணர்ந்துகொள்ளத் தெரியாத நிலைகண்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.

அதன் தொடர்ச்சி இன்றும் நீள்கின்றது. இது தேர்தல் காலம் என்கின்றபடியால் இவ்வாறு பல புது முகங்கள் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவார்கள். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டக் காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நாம் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியேறிய போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முதன் முதலாக எம்மை நாடிவந்து எமது குறைகளுக்கு தீர்வு பெற்றுத்தந்திருந்தார்கள்.

அந்தவகையில் நாம் என்றுமே அக்கட்சிக்கு நன்றிக்கடன் பட்டவர்களாவோம் அத்துடன் கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்திற்கு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும்  வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை. தவநாதன் தனது விஷேட நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து அதன் அபிவிருத்திக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உதயநகரிலுள்ள முன்பள்ளி கட்டட நிர்மாணத்துக்காக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 2 இலட்சம் ரூபா நிதியை வழங்கியிருந்ததுடன் அதற்கான தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியையும் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமையையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

ஆகையால் இதுபோன்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறையும் ஆற்றலும் கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமக்கு வாக்களித்து உங்கள் வாழ்க்கையை சுபீட்சமாக்குங்கள் என சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

Related posts: