இரு மாதங்களில் உயர்தர, சாதாரணதர முடிவுகள் – 2018 முதல் ஏற்பாடு – கல்வி அமைச்சு!

Wednesday, September 20th, 2017

எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரணம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் இரண்டு மாத காலத்துக்குள் அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை, கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள, அதன் 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், எதிர் வரும் வருடங்களில் க.பொ.த பரீட்சைகள் உட்பட ஏனைய பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் மற்றும் பாடசாலைத் தவணைகள் சம்பந்தமாக ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகள் விரைவாக வெளியிடப்படவுள்ளதால் சாதாரணதர மாணவர்கள் உயர்தரத்துக்கான பாடநெறிகளை முன் கூட்டியே தெரிவு செய்து கால இடைவெளியின்றி தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்பதுடன், உயர்தர வகுப்புக்களிலும் முன் கூட்டியே இணைந்து கொள்ள முடியும்.

க.பொ.த உயர்தரப் பாடசாலைகளின் பெறுபேறுகள் துரிதமாக வெளியிடப்படுவதால் உள்நாட்டு பல்கலைக்கழகங்களிலோ அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலோ தமது உயர்கல்வியை தொடர்வதற்கான தடைகளை தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.

க.பொ.த சாதாரண தரத்திலோ அல்லது உயர்தரத்திலோ போதிய தரமான பெறுபேறுகளைப் பெற முடியாத மாணவர்கள் அதற்கேற்ப எதிர்கால கல்வி நடவடிக்கைகளை தாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இவ்வாறு கல்வி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: