இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய தூதுவர் கோபால் பாக்லே !

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இலங்கை இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதற்கான நெருக்கமான உறவை மேலும் விஸ்தரிப்பதற்கான ஆணையுடனேயே தான் இலங்கை வந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரசினால் உண்டாகியுள்ள சவால்கள் மற்றும் கொவிட் 19ற்க்கு பிந்தைய பொருளாதார மீட்சி என்பவை தொடர்பில் இலங்கையுடன் தோளோடு தோள்நிற்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் உயர்ஸ்தானிகர் மீள வலியுறுத்தியுள்ளார்.
இந்தநோக்கத்தினை அடைவதற்காக உணவுபாதுகாப்பு,சுகாதார பாதுகாப்பு,தகவல்தொழில்நுட்ப ஒத்துழைப்பு சுற்றுலா பரிவர்த்தனைகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அதிகளவு முதலீடுகள் ஆகியன முன்னுரிமைக்குரிய விடயங்களாக இனம் காணப்பட்டுள்ளன என இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய அரசாங்கம் மற்றும் மக்களுடனான நீண்டகால உறவுகளை நினைகூர்ந்துள்ளார்.
புதிய துறைகளில் ஒத்துழைப்பு காரணமாக இருநாடுகள் மத்தியிலான உறவுகள் மேலும் வலுவானதாக மாறும் என இலங்கை பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இந்தியாவிற்கு இடையிலான பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியமும் இருநாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளும் இருநாடுகளிற்கும் இடையிலான மக்களிற்கு இடையிலான அதிகரித்த ஒத்துழைப்பிற்கும் இரு நாடுகளின் மக்களையும் நெருக்கமாக்குவதற்குமான தளமாக விளங்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு இந்திய தூதரகத்துடன் இணைந்து செயற்படுமாறு உரிய அதிகாரிகளிற்கு அறிவுறுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்த இந்திய அரசாங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின்போது வெளியிட்டுள்ளார்
Related posts:
|
|