இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளி தோழர் றெமிடியஸ் – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி!

ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் றெமிடியஸ் சட்டத்தரணி அவர்களின் இழப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு பேரிழப்பாகும்.
மனித உரிமைகளுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் யாழ்ப்பாண வீதிகளில் குரல் எழுப்பி ஒரு தீப்பிழம்பாக ஜொலித்து நின்ற தோழர் றெமிடியஸ் சட்டத்தரணி அவர்கள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் சரியான இடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிதான் என்பதை ஆராய்ந்தறிந்து, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
சட்டத்தரணியாக தனது தொழிலை வெறுமன பணம் சேர்க்கும் ஒரு மார்க்கமாகப் பார்க்காமல் தன்னைத் தேடிவந்து உதவி கேட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கவும், விடுதலை கிடைக்கவும் தன்னால் முடிந்ததைச் செய்த மனித நேயனாக வாழ்ந்த வாழ்க்கை நினைவுகளாக நிலைத்திருக்கும்.
எல்லாக் காயங்களுக்கும் காலம் மருந்து போடும் என்ற தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ளும் தற்துணிவோடு தனது பாதையில் சென்ற உன்னை இத்தனை அவசரமாக காலன் அழைத்துக்கொண்டு போவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையே தோழா …
எமது மக்களின் சமூக நீதிக்காகவும், சமத்துவ வாழ்வுக்காகவும் நாம் முன்னெடுக்கும் போராட்டப் பாதையில் உனது கனவுகளையும் சுமந்தபடி நீ நேசித்த உனது தோழர்களாகிய நாம் தொடர்ந்தும் உறுதியுடன் பயணிப்போம். தோழர் றெமிடியஸ் சட்டத்தரணி அவர்களுக்கு, தோழர்களின் இதய அஞ்சலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|