இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு!

Wednesday, March 31st, 2021

இருந்த வீடுகளையும் இழந்த நிலையில் மக்கள் அல்லற்படுவதற்கு பணப்பெட்டி தேர்தல் கூட்டே காரணமாக அமைந்துள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டி நாவலடி சனசமூக நிலையத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தவராசா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

உடுப்பிட்டி தொகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குகளை அபகரிப்பதற்காக அன்றைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசின் அடிவருடிகளாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வாக்குகளை அபகரிப்பதற்காக இவ்வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும் என உறுதிமொழியளிக்கப்பட்டதன் பிரகாரம் வறிய மக்கள் அவர்கள் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலைக்குள்ளாகினர்.

அதன்பின்னர் அதிகாரிகள் ஊடாக அத்திவாரம் இடுமாறு அவசரஅவசரமாக பணிக்கப்பட்டு இன்று மிகுதி வேலைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அம்மக்கள் திணறிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா 30 கோடி ரூபாவை பெற்றுக்கொண்டு மக்களின் நலன்களை முன்னெடுக்காது இருந்ததே  இவ்வாறான அவல நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நல்லாட்சி அரசின் காலத்தின் போது உடுப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பற்றி அவர்களால் ஒன்றைக்கூட பெருமையாக குறிப்பிட்டு கூறமுடியாது.

நாவலடி சனசமூக நிலையத்தை அன்றைய காலப்பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப்பங்களிப்பில் அமைத்து கொடுத்திருந்தபோதும்  அதில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு கூட நல்லாட்சி அரசின் காலத்தில் கூட்டமைப்பினரால் அகற்றப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டையே கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். ஆயினும், எம்மால் முடிந்தவரை உடுப்பிட்டி பிரதேசத்தை அபிவிருத்தியின் ஊடாக முன்னேற்றம் காணவைப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: