இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை – நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!

Friday, October 22nd, 2021

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நிகழ்நிலை தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தை அண்மையில் திறந்துவைக்கப்பட்டமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கிடையில் 65 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் இருதரப்பு உறவுகள் இதன்மூலம் மேலும் விரிவடைவதாகச் சுட்டிக்காட்டினார்.

நியூசிலாந்து சபாநாயகரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரான வனுஷி வோல்டர்ஸ் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபல்டன் ஆகியோர் வீடியோ தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்டனர்.

கொவிட் சவால்கள், தேர்தல் முறைமை, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம், பொருளாதார சவால்கள், மதத் தீவிரவாதம் மற்றும் விளையாட்டுத்துறை என்பன தொடர்பில் இரு நாடுகளினதும் அனுபவங்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எதிர்காலத்தில் இலங்கை – நியூசிலாந்து நநாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், அதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நியூசிலாந்து நாடாளுமன்ற தூதுக்குழுவினரை இலங்கைக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்ளுமாறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது அழைப்பு விடுத்தார்.

இலங்கையில் பிறந்து தற்பொழுது நியூசிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் வனுஷி வோல்டர்ஸ் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிடுவதாகவும் சபாநாயகர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: