இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம் – யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Friday, December 21st, 2018

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை ஆரம்பித்த பின்னரே வளங்களைத் தேடுகின்றோம். ஒரு வருடத்தில் 72 பேருக்கு இடம்பெறும் சத்திர சிகிச்சையை குறைந்தது இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம் என மருத்துவமனைப்பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைக்கூடம் ஆரம்பித்து ஓர் ஆண்டு நிறைவினை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”கொழும்பு, கண்டி, காலி ஆகிய வைத்தியசாலைகளில் போதிய கட்டடங்கள், வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே இருதய சத்திர சிகிச்சைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் அந்த மருத்துவமனைகளில் உள்ள சத்திரசிகிச்சைப் பிரிவுகள் போன்ற தராதரத்துடனேயே யாழ்ப்பாணப் போதனாவில் இருதய சத்திர சிகிச்சை பிரிவு உள்ளது.

இது பலருக்குத் தெரியாமலுள்ளது, குருநாகல், அநுராதபுரம் ஆகிய இடங்களிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் கூட இன்னும் ஆரம்பிக்கப்படாத இந்தச் சேவையை மருத்துவ நிபுணர் முகுந்தன் இங்கு ஆரம்பித்தார்.

போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருதய சத்திர சிகிச்சை நோயாளர்களில் சுமார் 50 பேரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்குச் சில மருத்துவர்கள் சிபாரிசு செய்திருந்தனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மருத்துவர் முகுந்தன் கருத்து தெரிவிக்கையில்,

இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைக் கூடத்தை இங்கு ஆரம்பித்துள்ளேன். அதை வளர்ப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. இந்தச் சத்திர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்தோர், செல்வந்தர்கள் முன்வர வேண்டும்.

இந்தப் பிரிவுக்கு இன்னும் 3 சத்திர சிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். சத்திரசிகிச்சைக்காக 985 பேர் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு 72 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம். அவற்றில் 66 பெரியளவான சத்திர சிகிச்சைகள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: