இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் – கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் – இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (14) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது:

”2022ஆம் ஆண்டு 29 புதிய சட்டமூலங்களையும், 2023ஆம் ஆண்டு 78 புதிய சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்தது.

அதன்படி, 107 சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நீதி அமைச்சின் வரலாற்றில் இக்காலப்பகுதியிலே அதிக எண்ணிக்கையிலான சட்டமூலங்கள் திருத்தப்பட்டுள்ளன.

மேலும், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நாட்டுக்குப் பயனுள்ள குழுவாக மாற்ற முடிந்தது.

அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைதிகள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்படி வெலிக்கடை, மஹர மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் மூலம் பாதணிகள், நுளம்புச் சுருள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: