இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020

யாழ். மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும். பொது மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் இடர் நிதியினை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏப்ரல் மாத உதவித் தொகையினை பெற்ற 135 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 ஆயிரத்து 113 குடும்பங்களிற்கு 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவித்தொகை 76 ஆயிரத்து 32 சமுர்த்தி பயனாளிகள், 11 ஆயிரம் சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், 39 ஆயிரத்து 473 தொழிலற்றவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பத்தினர்களிற்கு என வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

அத்துடன் தங்களுடைய பிரதேச சமுத்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ளமுடியும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: