இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு நடவடிக்கை!
Tuesday, May 17th, 2016தமது சொந்த இடமான இரணைதீவில் தம்மை மீளவும் குடியேற்றி அங்கு தமது கடற்றொழிலை சுமுகமாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறு அங்குவாழும் 400க்கும் அதிகமான குடும்பங்கள் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டின் போர்ச்சூழல் உக்கிரமடைந்ததை தொடர்ந்து 90 களின் பிற்பகுதியில் இத்தீவில் வாழ்ந்த மக்கள் அனைவரும் முழங்காவில் பகுதியை அண்டியுள்ள பகுதிக்கு (இரணைமாதா நகர்) இடம்பெயர்ந்திருந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இதனை அண்டிய நாச்சிக்குடா கடற்பிரதேசத்தில் பலசிரமங்களின் மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டுவருகின்ற போதும் தமது சொந்த இடமான இரணைதீவில் நிரந்தரமாக தங்கி இருந்து தொழிலை முன்னெடுப்பதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
மீன் பிடியோடு தொடர்புபட்டு சுயதொழிலாக பெண்கள் மேற்nகொள்ளும் பல்வேறு வாழ்வாதார முயற்சிகளை தொடரும் வாய்ப்பை இங்குள்ள மக்கள் இழந்த நிலையில் குறிப்பாக இங்கு வாழும் பெண்ணை தலைமையாக கொண்ட குடும்பங்கள் பெரும் வாழ்க்கை நெருக்கடிளை எதிர்கொண்டுவருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இதுதவிர அங்குள்ள தமது கால்நடைகள் மற்றும் தெங்கு உற்பத்தி மூலமான வருமானங்களையும் இழந்த நிலையில் தமது வாழ்விடங்களும் அழிவை எதிர்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது இங்கு வாழ்ந்த மக்களைப் பெறுத்தவரை பெரும் மனவேதனை தரும் விடயமாகும்.
தற்போது போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 6ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மாவட்ட அரச அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இரணை தீவில் நிரந்தரமாக தங்கி இருந்து கடற்தொழிலை முன்னெடுக்க உதவுமாறு இரணைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பல தடைவைகள் கோரிக்கை விடுத்த போதும் இந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை.
பிந்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இங்குள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொடர்பு கொண்டு தமது நிலமையை விளக்கியதை அடுத்து பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இம்மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியதோடு விரைவில் இரணைதீவுக்கு சமபந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|