இரணைதீவில் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, March 3rd, 2021

இரணைதீவில் கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாசா அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை இரணை மாதாநகர் இறங்குதுறையில் நடைபெற்றுள்ளது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியைத் தெரிவு செய்துள்ளதாக நேற்றையதினம் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகஜர்களும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது.

அத்துடன் கொறோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியாருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும் கடற்படையினர் அங்கு நிலைகொண்டு இருப்பதையும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்ததுடன் இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டள்ள நிலையில், குறித்த தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: