இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது – முல்லை மாவட்டச் செயலகம் !

Saturday, June 9th, 2018

இரணைதீவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரியில் இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேறினார்கள். அன்று முதல் கடந்த 15 ஆம் திகதி வரை இவர்கள் இரணைமாதா நகரில் வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இரணைதீவுக்கு மீன்பிடி படகுகளில் சென்று குடியேறிய மக்களுக்கு மே மாதம் 15 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சினால் இரணைதீவில் குடியேறுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு 190 குடும்பங்கள் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத் திட்டங்களை வழங்க முடியாது என்றும் அவர்கள் மீள்குடியேறிய மக்கள் அல்ல மாறாக குடியேறிய மக்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இந்த மக்களுக்கு இரணைமாதாநகரில் அரசின் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய பல உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் ஒரு குடும்பத்திற்கு அரசின் வீட்டுத்திட்ட வீடு ஒரு தடைவ மட்டுமே வழங்க முடியும் என்றும் மாவட்டச் செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் இரணைதீவில் குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தங்களின் பிரச்சினையை விசேட பிரச்சினையாக கருத்தில் எடுத்து வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கும் இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் குடியேறுவதற்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது உதவி செய்யாத அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த விடயத்திலாவது உதவ வேண்டும் என இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் கோருகின்றனர்.

Related posts: