இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு உயர் பதவிகளை வழங்க வேண்டாம் – பெப்ரல்!

Saturday, May 13th, 2017

நாட்டுக்கான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரிகளை நியமிக்கும் போது இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை இயற்றுமாறு கொள்கை வகுப்பாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாட்டுக்காக வேறு நாடுகளுடன் உடன்படிக்கைகளை கையெழுத்திட கூடிய பதவிகளுக்கு இரட்டை குடியுரிமை கொண்டவர்களை நியமிப்பதை தவிர்க்குமாறு ஆட்சியாளர்களிடம் கோருகிறோம்.உயர்மட்ட அரச அதிகாரிகள் இரட்டை குடியுரிமையை கொண்டிருப்பது பெரிய பாதிப்பாக அமையலாம்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரி இரட்டை குடியுரிமை கொண்டவராக இருந்தால் அவர் அழுத்தங்களுக்கு அடிப்பணிய வாய்ப்புள்ளது.

கடந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளூநர் தொடர்பான சம்பவத்தில், அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதும் பெரிய பிரச்சினையாக இருந்தது எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: