இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!

Monday, September 21st, 2020

19 ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

19 ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

“தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல அம்சங்களைத் தக்க வைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூபத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் அமைச்சர் நாணயக்கார ஊடகங்களுக்கு இதைத் தெரிவித்துள்ளார்.

20 ஆம் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லவுள்ளமை பற்றிக் கேட்டபோது, நீதிமன்றின் கருத்தை தேடுவதும் ஒரு நல்ல முடிவு என்பதால் இது ஒரு சிறந்த நகர்வாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: