இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது – ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டு!

Friday, August 6th, 2021

இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள ஒரு நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இதை நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவது இயல்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விஞ்ஞான ரீதியிலான அம்சங்களின் அடிப்படையில், சில தீர்மானங்களை மேற்கொண்ட போதும், இரசாயன உரப் பாவனை குறித்த அரச கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இரசாயன உரத் தடை நீக்கப்பட்டதா” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் –

சேதனப் பசளைப் பயன்பாடு, அநேகமான விவசாயிகளுக்குப் புதியதோர் அனுபவம் என்பதால், இந்த நடவடிக்கைகளை வாராந்தம் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதற்காக தொழில்நுட்ப மற்றும் புதிய முறைமைகளைப் பயன்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அரச பல்கலைக்கழகங்கள், விவசாயப் பீடங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு என்பன இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுவதுடன், அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும், தேசிய தேவையின் அடிப்படையில் சில தீர்மானங்களுக்கு வரவேண்டியுள்ள தாகவும், கொள்கை சார்ந்த விடயங்களுக்கு வெளியே எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்..

இயற்கைக் கனிமங்கள், கிலேடட் நுண் தாவர ஊட்டக் கூறுகளை இறக்குமதி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர், முறையான பரிசீலனை மற்றும் கடுமையான கண்காணிப்பின் கீழ், அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மண் பரிசீலனையைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறியீட்டின் அடிப்படையில், அந்தந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான அளவில் சேதனப் பசளையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மண் பரிசீலனை, அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று, விவசாயத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி. சில்வா தெரிவித்துள்ளார்.

“சேதனப் பசளைக்கு மாறிய பின்னர் அறுவடை குறைவடைந்தால், விவசாயிகளின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க –  “நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பத்தில் பிரச்சினைகள் உருவாக முடியும். எனினும், பேண்தகு பசுமை சமூக பொருளாதார முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவதைத் தாமதப்படுத்த வேண்டியதில்லை.

அத்துடன் உருவாகும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை இனங்காண வேண்டும். இரசாயன உரப் பாவனையைக் கைவிடுவதன் மூலம் உற்பத்தி குறையும் என்று விவசாயிகள் சிந்திக்க முடியும்.

அப்படி நடக்குமேயானால், இரசாயன உர நிவாரணத்துக்கு வருடாந்தம் செலவிடப்படும் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை மூலம், குறைவடையும் வருமானத்தை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கூற்றை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: