இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவிப்பு!

Monday, May 24th, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதன்காரணமாக பல மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படாது தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து பிசிஆர் பரிசோதனைக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது பிசிஆர் சோதனைக்குரிய இரசாயனத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக பிசிஆர் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக எக்ஸ்ரக்ஸன் ரீஏஜென்ட்ஸ் எனப்படும் இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 500 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

வழமையான நாளொன்றில் ஆயிரத்து 200 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் கடந்த இரண்டு நாட்களில் தலா 500 வரையான மாதிரிகளையே பரிசோதனைக்கு உட்படுத்த முடிந்ததாக தெரிவித்துள்ள அவர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் இயந்திரத்திற்கான குறித்த இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனத்திடம் அந்த இரசாயனப் பொருளின் கையிருப்பு இல்லை என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் வெளிநாட்டில் இருந்தே குறித்த இரசாயனப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் இன்றைய தினத்திற்குள் அந்த இரசாயனப் பொருளை பெற்றுத் தருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரசாயனப் பொருள் கிடைக்கும் பட்சத்தில் வழமைபோன்று நாளைமுதல் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: