இன்று நள்ளிரவுடன் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

Wednesday, August 17th, 2016

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட உள்ளது. தேசிய பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தேச பரீட்சை வினாத்தாள் அச்சிடல், விநியோகம் செய்தல், அது குறித்து கலந்துரையாடுதல், வகுப்பு நடாத்துதல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடையை மீறுவோர் தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 1911க்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 0112421111 என்ற இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: