இன்று இரவுமுதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, May 21st, 2021

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படுவதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த வாரம் வியாழக்கிழமை(13) முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத் தடை கடந்த திங்கட்கிழமை(17) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது.

நேற்றுக்காலை நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கான முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts: