இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு!

Wednesday, March 23rd, 2022

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்றையதினம் சர்வகட்சி மாநாடு இடம்பெற்றது

ஜனாதிபதி காரியாலயத்தில், முற்பகல் 10 மணிக்கு சர்வகட்சி மாநாடு ஆரம்பமாகியது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.

அத்துடன், எதிரணியின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான கட்சிகளும், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளன.

அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 பங்காளிக் கட்சிகளுள், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் ஆகிய இரு கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில், 11 கட்சிகளின் கூட்டணியின், 3 உறுப்பினர்கள் பங்கேற்பதாக, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

11 கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உட்பட அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உட்பட மேலும் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

11 கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2 அல்லது 3 பேர் கலந்துகொள்வர்.

ஆனால், அதில் பங்கேற்பவர்கள் குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: