இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல – எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 12th, 2021

குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்காகத் தொழில் செய்யத் தொடங்கிவிடும் பருவம் அல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, குழந்தைப் பருவம் கற்பதற்கும், விளையாடுவதற்கும், அறிவதற்கும் – அவற்றின் மூலமாக, உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை விருத்தி செய்வதற்குமான பருவமாகவே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்..

இன்று குழந்தைத் தொழிலை ஒழிப்புக்கான உலக தினம். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நமது குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்தைக் குழந்தைப் பருவமாகவே வாழ்ந்து செப்பனிடப் பாதுகாப்பான வழியமைத்துக் கொடுக்க வேண்டியது பெரியவர்களாகிய நமது பொறுப்பு ஆகும்.

இதன் காரணமாகவே – க.பொ.த. சாதாரண தரம் வரையிலான அடிப்படைக் கல்வி என்பது எமது நாட்டில் சிறுவர்களுக்குக் கட்டாயமானதாக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில்“இத் தருணமே செயற்பட்டு குழந்தைத் தொழிலை ஒழிப்போம்” என்ற இந்த ஆண்டு குழந்தைத் தொழிலை ஒழிப்புக்கான உலக தினத்தின் கருப் பொருளாக கொண்டுள்ளது.  

சர்வதேச தொழிலாளர் அமைப்பு.(International Labour Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund – UNICEF) ஆகிய நிறுவனங்களால் தொடங்கப்பட்ட – 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் குழந்தைத் தொழிலை உலகில் நிறுத்தும் பணியில் நாமும் உறுதியுடன் பங்கேற்றுள்ளோம் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச என்றுமே இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல; எதிர்கால சந்ததிக்கானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: