இந்து, கலை, கலாசாரத்துக்கென பல்கலையில் தனியான வளாகம் – வடக்கு ஆளுநர் !
Sunday, June 17th, 2018
தமிழ் இந்து கலை கலாசாரத்துக்கென தனியான வளாகமொன்றை பல்கலைக்கழகத்தில் அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
தமிழ் இந்து பாரம்பரிய கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பாரம்பரியங்கள் சாதாரண பொதுமக்களிடையே காணப்பட்டாலும் அதை மாணவச்சமூகம் அறிந்துகொள்வது அவசியம். எமது மொழி கலை கலாசாரங்களை பாதுகாப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் ஒரு பல்கலைக்கழக வளாகம் அவசியம்.
இது தொடர்பில் பிரேரணை ஒன்றை மாகாண சபையின் கடந்த அவையில் முன்வைத்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மாகாண ஆளுநரிடம் இது பற்றி நேற்று முன்தினம் எடுத்துரைத்தேன். அனைத்து மொழி மற்றும் கலாசாரத்துக்கு பல்கலைக்கழகங்கள் உண்டு. அது போன்று எமக்கும் வேண்டும்.
இது தொடர்பில் அரசதலைவர் மற்றும் உயர் கல்வி அமைச்சிடம் பேசுவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றார்.
Related posts:
|
|