இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் – இலங்கை கனியவள மொத்த களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, March 20th, 2022

இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது.

அதில் 35,000 மெற்றிக் டன் டீசல் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் 20,000 மெற்றின் டன் கொலன்னாவை களஞ்சியசாலைக்கும் ஏனைய 15,000 மெற்றிக் டன் முத்துராஜவெல களஞ்சியசாலைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கனியவள மொத்த களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தப்படவுள்ள டீசல், தொடருந்து ஊடாக நாட்டின் பல பகுதிகளுக்கு பகிரப்படவுள்ளது.

அத்துடன் போதுமான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் நாளொன்றுக்கு 5,000 மெற்றிக் டன் டீசலுக்கான தேவை இருந்த நிலையில் தற்போது அந்த தொகை 8,400 மெற்றிக் டன்னாக அதிகரித்துள்ளது.

மக்கள் தேவையற்ற விதத்தில் டீசலை சேமிப்பதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து காணப்படும் மக்களின் வரிசையை குறைக்க முடியும் எனவும் இலங்கை கனியவள கூட்டுதாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: