இந்திய அரசு குறித்து த.தே.கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!
Tuesday, February 28th, 2017இந்திய அரசு குறித்து காலத்திற்கு காலம் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது உண்மை நிலைப்பாடு எது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –
சீனா இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும் ஆனாலும் இந்தியா அடிக்கடி இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து வருவதாக அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் அமைக்கப் போகின்றோம் என்றும் இந்திய அரசின் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்றும் உண்டு என்றும் அடிக்கடி கூறி சுயதம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
ஆனாலும் அதற்கு மாறாக அரசியல் குத்துக்கரணம் அடித்த இரா சம்பந்தன் அவர்கள் இந்திய அரசை எதிராளியாக சித்தரித்து அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெளிவற்ற அரசியல் நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
83 ஜுலைக் கலவரத்தின்போது அவலப்பட்டு ஓடிப்போன ஈழத் தமிழர்களை அரவணைத்தது இந்திய அரசு. எமக்காக குரல் கொடுத்தவர்களும் அவர்களே. எமது உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர்களும் அவர்களே. 87 வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன் படை நகர்வின்போது எமது மக்களின் அழிவுகளை தடுத்து நிறுத்தியதும் இந்தியாவே. உணவுப் பொட்டலங்களை போட்டு எமது மக்களின் பசிதீர்த்ததும் இந்தியாவே. இன்றுவரை நீடித்துவருகின்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் உருவாகுவதற்கு பிரதான பங்குள்ளவர்களும் அவர்களே
இந்த நன்றி மனோநிலையே இன்னமும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இந்நிலையில் சம்பந்தன் அவர்கள் இன்று தெரிவித்திருக்கும் வழமைக்கு மாறான சந்தர்ப்பவாதக் கருத்தக்கள் குறித்து தமிழ் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
ஆகவே ஆபத்தில் காப்பவர்கள் இந்தியா என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடிக்கடி கூறிவரும் கருத்து உண்மையானதா? அல்லது இலங்கை விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைக்கின்றது என இன்று கூறுவது உண்மையானதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்) கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|