இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி !

Sunday, March 13th, 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 6 வருடங்களுக்குள் 5,000 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் சேர்க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதானி இந்தியா நிறுவனம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களின் முதற்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான அமைச்சரவை உபகுழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கிடைக்கும் முதலீடுகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், இந்த முதலீடுகளை தாமதப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய வீடுகள் நிர்மாணித்தல், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது போன்றவை காரணமாக வருடாந்தம் 5% முதல் 8% மின் தேவையை அதிகரிக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரி சக்தி திட்டங்களை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யவும் திட்டங்ளை முன்னெடுப்பதற்கு காணப்படும் சட்ட சிக்கல்களை நீக்குதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வினைத்திறனான ஆற்றல் வலையமைப்பு இணைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அமைச்சரவை உபகுழு கவனம் செலுத்தி வருவதாக உபகுழு தலைவர் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: