இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன!

Sunday, May 22nd, 2022

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இன்றையதினம் நாட்டை வந்தடைந்துள்ளது.

9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாட்டை வந்தடையவுள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய உதவித் திட்டத்தின் முதற்தொகுதியாக இந்த பொருள் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: