இந்தியாவிலிருந்து பக்தர்கள் வராதது வருத்தமைளிக்கின்றது – கடற்படைத்தளபதி!

Sunday, March 12th, 2017

கச்சதீவு திருவிழாவிற்கு, இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகைதராதது மிகுந்த கவலையளிப்பதாக கடற்படைத்தளபதி ரவீந்திர விஜயகுணவர்த்தன கச்சதீவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திருவிழாவிற்காக இந்திய பக்தர்களை வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே வருகை தராதது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். இது தொடா்பாக  மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வருடந்தோறும் இடம்பெற்றுவரும் இத்திருவிழாவினை இந்திய – இலங்கை மக்களின் நல்லுறவை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே நாம் காண்கின்றோம். இந்நிலையில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. விரைவில் சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளோம். இந்நிலையில் மேற்படி திருவிழாவினை இந்திய பக்தர்கள் புறக்கணித்திருப்பது இருநாட்டு உறவுகளையும் பாதிப்பதாக மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே மீனவர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டிருந்தார் எனத் தெரிவித்தே, இந்திய பக்தர்கள் குறிப்பாக மீனவர்கள் இத்திருவிழாவினைப் புறக்கணித்ததுடன் தொடர்ந்தும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: