இந்தியப் பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Monday, February 10th, 2020

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமரும் இந்திய ஜனாதிபதியும் சந்தித்த போது இவருக்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பு அளித்தார். இராணுவ மரியாதையும் இதன் போது இடம்பெற்றது. தமது விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவில் நவம்பர் மாதம் மேற்கொண்ட வெற்றிகரமான அரச விஜயத்துக்கு மத்தியில் இந்திய பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பெறுபேறாக இது அமைந்துள்ளது.

இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கும் அயல்நாட்டுக்கு முதலாவது இடம் என்ற கொள்கைக்கு அமைவாக இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் தொடர்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து இந்திய பிரதமர் மோதி இலங்கை பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தான் உயர்ந்தபட்ச பங்களிப்பை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச பாதுகாப்பு பொருளாதாரம் கலாச்சாரம் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் அரச பாதுகாப்புக்கான புரிந்துணர்வு புலனாய்வுத்துறையின் ஆற்றலை மேம்படுத்துதல் பயங்கரவாத்தை தடுப்பதற்கு இந்தியாவினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பந்தமாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது, வீடமைப்புத் திட்டத்திற்கான நிதி சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய முழு நாட்டிற்குமான, அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்களுக்கான உதவிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள கரிசனை தொடர்பாக தாம் அறிந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு தேர்தலை நடத்தி முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்தது. இது பாரிய ஜனநாயக வெற்றியாகும்.

எனினும் அதன் மூலம் வடக்கு மக்களுக்கு சொல்லும்படியான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts: