இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022

இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்றையதினம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான செய்திகளும் நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்லவென இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்ரமணியன் சுவாமி நேற்று ட்விட்டர் பதிவொன்றை இட்டிருந்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் அமைதியின்மையைத் தணிக்க இந்தியப் படையினர் களமிறங்க வேண்டும் என அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்திய எதிர்ப்பு குழுவினர் இலங்கையில் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் அதில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: