இது அரசியல் செய்யும் நேரம் அல்ல – அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஒட்டுமொத்த நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய பிரதமர் மேலும் கூறுகையில் –

நமது நாட்டின் ஒட்டுமொத்த நீரையும் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம். கிராமப்புற நீர்ப்பாசனத் திறனை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வெள்ளம் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.

இதேபோன்று தேசிய உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமையவே 5,000 கிராமப்புற சிறு நீர்ப்பாசன மற்றும் குடிநீர் அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான திட்டத்தை எங்கள் அரசு ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களிலும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் குளங்கள் புனரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது எப்போதும் அறிஞர்களாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டன.

குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்க தொழில்நுட்பம் உள்ளது. குளங்களை தூர்ந்து ஆழப்படுத்தினால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, குளங்கள் அணைக்கட்டுகளை புனரமைப்பதற்கான தேசியத் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். கடந்த கால தொழில்நுட்பமும், நவீன அறிவியல் அறிவும் இன்று இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இவை நமக்குத் தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதது போன்று உள்ளார்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதனால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நாட்டைப் பற்றி சிந்திக்கவும், அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான தளமொன்றை நிர்மாணித்தோம்.

கொவிட் தொற்று நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. நாங்களே அதனை செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராக உள்ளோம்.

அந்தவகையில் இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களை அடுத்த முறை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

மேலும் புத்தாண்டு காலம் நெருங்குகிறது. உண்மையான பிரச்சனையை பார்த்துக்கொண்டே நாளை எரிபொருள் இருக்காது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொய்யான மாயைகளை உருவாக்குகிறார்கள்.

சில பிரச்சினைகள் சிலரின் நலனுக்காக மக்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டன. அதனால்தான் கூறினேன், நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், உங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: