இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Saturday, January 8th, 2022

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்’போது அவர் மேலும் கூறுகையில் –

இப்பகுதி மக்கள் தண்ணீரின் மதிப்பை நன்கு உணர்ந்துள்ளனர். இதை நான் புதிதாக விளக்க வேண்டியதில்லை. இந்த திட்டத்தை முன்பே முடித்திருந்தால், அது இன்னும் மதிப்புமிக்கதாக இருந்திருக்கும். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று அந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு வழங்க முடிந்துள்ளது. உலகில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், மிகக் குறைந்த அளவே பயன்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம்.

அதிலும் குறிப்பிட்ட அளவை மட்டுமே குடிநீருக்காக பயன்படுத்த முடியும். இவ்வாறு குடிநீர் மட்டுப்படுத்தப்படினும் குடிநீருக்கான ஆதாரங்களை பாதுகாக்க மக்கள் முன்வராதிருப்பது ஒரு பிரச்னையாக உள்ளது.

ஆனால் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் இலக்கை நோக்கியே நாம் பயணித்து வருகிறோம். இந்தக் கொள்கை 2025ல் யதார்த்தமாகும்போது, முழு நாட்டிற்கும் குழாய் மூலமான சுத்தமான குடிநீரை வழங்க முடியும்.

இதனிடையே மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கிளால், தேர்தல் நெருங்குகின்றதா என்று சிலர் கேட்கின்றனர். தேர்தலை எதிர்பார்த்து நாங்கள் இந்த திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

குடிநீரை பெற்றுக்கொடுக்கும் போது இங்குள்ள மக்களின் கட்சி என்ன என்று யாராவது கேட்டதுண்டா? சிலர் இன்று இவை அனைத்தையும் குழப்பிக் கொள்கின்றனர். மக்களுக்கு இக்கட்டான நிலையில் இருக்கும்போது நிவாரணப் பொதி கொடுத்தால் அதன்போதும் இவ்வாறே கேள்வி எழுப்புகின்றனர். நாம் மக்களின் சிரமங்களை புரிந்து கொண்ட அரசாங்கம். பொருட்களின் விலை உயரும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்தான் நிவாரணம் வழங்க முன்மொழிகிறோம்.

ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரும்பவில்லை. அதற்கும் ஏதோ சொல்கிறார்கள். நாம் வழங்குவதையும் விரும்புவதில்லை.  பிடிக்காது. அவர்களும் கொடுப்பதில்லை. மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

சரியாக கொவிட் தொற்றை நாம் கொண்டு வந்ததை போன்றே இவர்கள் பேசுகின்றனர். ஆனால் நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலமே மக்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்பது குறித்து எவரும் பேசுவதில்லை.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அறிந்தவுடன் நாம் அது குறித்து ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொண்டோம். ஆனால் முழு உலகையும் ஆட்கொண்ட கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை எம்மால் ஒரே இரவில் அகற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: