ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்வதை தடுக்க இருதரப்பு ஆலோசனை!

Thursday, September 22nd, 2016

இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்வதை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71-வது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்பட முக்கிய தலைவர்கள் பலரை அங்கு சந்தித்து கலந்துரையாடியது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது கூறினார்.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் சர்வதேச தலைவர்களின் பாராட்டு பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தன்னை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இலங்கையின் தற்போதைய முன்னேற்றம் பாராட்டுக்குரியவை எனவும், அது உலகுக்கு ஒரு உதாரணமாக இருப்பதாக தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடனான சந்திப்பின்போது, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்பவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அதை தடுப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து முன்னேடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71-வது கூட்டுத்தொடரில், இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரையாற்ற உள்ளார்.

தனது உரையின்போது போதைப் பொருள் தடுப்பு, காலநிலை மாற்றம் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

_91325446_presidentmaithripalasirisenaheldbilateralmeetingswiththeaustralianprimeministermalcolmturnbull

Related posts: