ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!
Thursday, May 13th, 2021வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
இந்தன்போது ஆளுநரின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலில் திட்டமிடல், நிதி, நிர்வாகம், ஸ்தாபனம், ஆளணி மற்றும் பயிற்சிகள் என பல தரப்பட்ட அமைச்சுக்களின் செயற்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் கல்வி, சுகாதாரம், விவசாயம், மகளிர் விவகாரம், சுகாதாரம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்களுக்கான வருடாந்த சிறப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் வகைப்பாடு சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றின் செயல்திறன் மட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் கேட்டறிந்துகொண்டுள்ளார்..
மேலும், வடமாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென இயங்கும் இடைத்தங்கல் முகாம்கள் தொடர்பிலும் கேட்டறிந்த ஆளுநர் அவர்கள் கொரோனா சமுதாயப்பரவலினை கட்டுப்படுத்தும் முகமாக தன்னார்வ பணியாளர்களை இணைப்பதன் மூலம் மாவட்ட ரீதியில் பெறப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என தெரிவித்ததுடன், கொத்தணிகள் உருவாகுகையில் இலகுவாக மாறுபாடுகளை அடையாளபடுத்தவும் முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர் எந்த துறையிலும் புதிய நியமனங்களை வழங்கும் போது பணிக்குறிப்பினை பெற்றுக் கொள்ளுமாறும் அதனை பூர்த்தி செய்யும் பட்சத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவற்றை வழங்குமாறும் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வருட க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கேட்டறிந்த ஆளுநர், மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு குறித்த அதிகாரிகளினை பணித்தார்.
அத்துடன் சமூகத்தில் காணப்படும் அனைத்து எதிர்மறையான எண்ணங்களை நீக்குவதன் மூலமே சமுதாயத்தினை மேம்படுத்தலாம் என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|