ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

Wednesday, August 23rd, 2017

வடமாகாண ஆளுநருக்கும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று மாலை 03 மணியளவில் யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது மடு வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள மாலினி வெனிற்றன் மற்றும் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி தற்போது மன்னார் பாடசாலையொன்றில் கடமையாற்றும் தனபாலசிங்கத்தினதும் முறையற்ற மீள் நியமனங்கள் தொடர்பாகவே ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இருவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வடமாகாணக் கல்வியமைச்சில் தகவல் பெறப்பட்டன. இதனடிப்படையில் க.தனபாலசிங்கத்திற்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் இவர் 55 வயதுடன் அரச சேவையிலிருந்து 04.04.2017 அன்று கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்று ஒழுக்காற்று தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இவருக்கு எதிரான 25 குற்றச்சாட்டுக்களில் 23 குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த அதிபரால் வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீடுகள் வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவால் முன்னர் இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது அவருக்கு வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு அவர் சேவையை தொடர அனுமதி வழங்கியுள்ளமையும், வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சில் தனபாலசிங்கம் தொடர்பான நிதிக் குற்றச்சாட்டுக்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இருப்பினும், அவரது ஒழுக்காற்று விசாரணை அறிக்கையில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டுமென்பதுடன் 01.07.2017 அன்று அரச சேவையிலிருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் அவர்களின் அனுமதிக்கமையவே மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என வடமாகாணக் கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.இவ்வாறு ஊழல் மற்றும் முறைகேடு புரிவோரைப் பாதுகாப்பதானது வடமாகாணக் கல்விப் புலத்துக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய ஆளுநர் ஒருவார காலத்துக்குள் இவை தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்

Related posts: