ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை – யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Monday, March 1st, 2021

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் எதிராக சட்ட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுடாதுள்ளனர்.

அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்றிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிசாராகிய எமக்குள்ளது எனவே அரச மற்றும் தனியார் பேருந்துகள் இன்றிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவையாற்ற வேண்டும் என தீர்மானிக்கபட்டது.

இவ்விடயம் தொடர்பில் யாழ் மாநகரமுதல்வர் மணிவண்ணன் தெரிவிக்கையில் வடக்கு மாகாண ஆளுநருடன் இடம்பெற்ற பல்வேறுபட்ட கூட்டங்களின் போது இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இன்றையதினம் குறித்த தீர்மானம் தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என இ,போ,ச சாரதி நடத்துனர்கள் தெரிவிக்கின்றார்கள் இதில் என்ன குழப்பம் என்று எனக்குத் தெரியவில்லை.

எனினும் பொதுமக்களுக்கான சரியான சேவையினை வழங்கும் முகமாக வடக்கு ஆளுநரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரச மற்றும் தனியார் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் எனினும் நாளையதினத்தில் இருந்து கட்டாயமாக புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்து சேவைகளும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தமது உயர் மட்டத்திலிருந்து தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி அல்லது சாலை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த யாழ். மாநகர முதல்வர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் பல்வேறுபட்ட கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளை அழைத்த போதும், அவர்கள் சமுகமளிக்கவில்லை. தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

எனவே இனியும் அனுமதிக்க முடியாது இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்துதான் குறித்த சேவைகள் இடம்பெற வேண்டும். அதனை தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தாங்கள் பேருந்து சேவையை நிறுத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: