ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் கமகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, தொற்றை பரப்பும் நோக்கில் எவரேனும் செயற்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் கமகே உள்ளிட்டோர் பதிவு செய்துள்ள முறைப்பாட்டுக்கு ஏற்ப, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் முற்றாக கட்டுப்பாட்டில் இல்லாத காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நோய்த் தொற்று பரவும் வீதம் மேலும் அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்க்கை மற்றும் பொது சுகாதாரம் என்பவற்றை பொருட்படுத்தாமையால் பாரதூரமான சுகாதார சீர்கேடு நாட்டில் உருவாகக்கூடும் என குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயலாற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாதெனவும் முறைப்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: