ஆராய்ந்த பின்பே முஸ்லிம்களுக்குக் காணி: யாழ்.பிரதேச செயலர் தெரிவிப்பு!

முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்வுக்காகக் காணிகள் தேவை என்று பதிவுக் மேற்கொள்கின்றனர். காணிகள் வழங்கப்படுவதாயின் முன்னர் அவர்கள் இங்கே இருந்தார்களா என்பது தொடர்பிலும் வேறு இடங்களில் காணிகள் இல்லையா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்தே காணி வழங்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பி.தயானந்தா தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது –
இந்த மாதம் 3ஆம் திகதிவரை 2ஆயிரத்து 415 முஸ்லிம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 630 குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றன. 630 குடும்பங்களிலும் சொந்தக் கணியில் குடியிருப்பவர்கள் 261 பேரும் கோயில் காணிகளில் குடியிருப்பவர்கள் 21பேரும் காணியற்றவர்களாக 348 பேரும் உள்ளார்கள். இதுவரை மீள்குடியமர்வதற்கு 1785 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 458 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரத்து 614 குடும்பங்கள் காணி இல்லாதவர்களாகப் பதிவு செய்துள்ளனர்.
148 குடும்பங்கள் காணி இருப்பதாகவும் புதிய வீடு தேவை என்றும் 23 குடும்பங்கள் வீடு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காணி அல்லது வீடு தேவை என்போரின் பதிவுகள் தற்போது யாழ்.பிரதேச செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொடுக்கப்படுகின்ற ஆவணங்களின் அடிப்படையில் ஏற்கனவே இந்த இடத்தில் வசித்தார்களா என்ற தரவு ஆராயப்படும். அதன் பின்னரே இவர்களுக்குக் காணிகள் மற்றும் வீடுகள் வழங்கப்படும் – என்றார்.
Related posts:
|
|