ஆரம்பமானது க.பொ.த சாதாரண தர பரீட்சை !

Monday, December 3rd, 2018

இன்று ஆரம்பமானது கல்விப் பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை. இது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை, நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில், கல்விப் பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்ச்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.அவர்களுள் 4 லட்சத்து 22 ஆயிரத்து; 750 பேர் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகளாவர்.

இம்முறை இடம்பெறவுள்ள பரீட்சையில் மூன்று மணித்தியால பரீட்சை வினாத்தாளுக்காக, மேலதிகமாக 10 நிமிடம் வாசிப்பு நேரமாக வழங்கப்பட உள்ளதென பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்தார்.

இதேநேரம், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால், அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் 011 278 4208 அல்லது 011 278 4537 முதலான இரண்டு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளையோ அல்லது இலத்திரனியல் உபகரணங்களையோ எடுத்துச் செல்வது தடைவிதிப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

குறித்த பொருட்கள் மாணவர்களிடமிருந்து மீட்கப்பட்டால், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சையில் 5 ஆண்டுகளுக்கு தோற்றுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பரீட்சைகள் இடம்பெறும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்கவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் இடம்பெறும்போது, பரீட்சைகள் நிலையங்களினதும் அதனை சூழவுள்ள பிரதேசங்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, காவற்துறை சார்ஜன் ஒருவரையும், கான்ஸ்டபிள் ஒருவரையும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, வினாத்தாள் மற்றும் விடைதாள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் காவற்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சையை முன்னிட்டு, நுவரெலியா மாவட்டத்தில் பரீட்சார்த்திகளின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்தி தருமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக தலவாக்கலை – எல்ஜின், தலவாக்கலை – டயகம, தலவாக்கலை – பூண்டுலோயா, தலவாக்கலை – நாவலப்பிட்டி, தலவாக்கலை – நுவரெலியா முதலான பாதைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் காலை வேளைகளில் போதுமான அளவு சேவையில் ஈடுபடுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த பிரதேசங்களில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு காலை 8.00 மணிக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் செல்வதில் பல சிக்கல்கள் இருப்பதாக பெறறோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பரீட்சார்த்திகளின் நலன்கருதி குறித்த வீதிகளில் வழமைக்கு மாறாக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:


அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் - ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு...
வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - இறப்புக்களின் எண்ணிக்கையும...
மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் அத...