ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்!

Friday, August 20th, 2021

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன. புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக அதாவது இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என தலிபான்கள் பிரகடனம் செய்தனர். இதை தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கடுமையான பண தட்டுப்பாடு, அதிகார வர்க்கத்தின் பற்றாக்குறை மற்றும் ஆயுதக்குழு ஒன்றின் எழுச்சி அச்சுறுத்தல் போன்றவை தலிபான்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணமின்றி வறண்டுள்ளன. இறக்குமதியையே சார்ந்திருக்கும் ஆப்கானில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் சுமார் 3.8 கோடி மக்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு ஏற்கனவே இருந்த அரசுகள் எதிர்கொண்ட அதே சவால்களை தலிபான்களும் எதிர்கொள்ள நேரிட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம் அது மட்டுமின்றி கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது அவர்களுடன் இணைந்து போரிட்ட வடக்கு கூட்டணி மீண்டும் உயிர்பெறத் தொடங்கி இருக்கிறது.

Related posts: