ஆனையிறவு உப்பளம் மீண்டும் செயற்படும் காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் – மாசார் மக்கள்!

தங்களால் தொடங்கப்பட்ட ஆனையிறவு உப்பளப் பணிகள் தற்போது ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதால் நாம் மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் எதிர்கொண்டுள்ளோமென பளை மாசார் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாசார் பகுதிக்கு இன்றைய தினம் (05) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது முன்னைய அரசில் நீங்கள் அமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்ட ஆனையிறவு உப்பளப் பணிகள் தற்போது ஒரு ஸ்தம்பித்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஆனையிறவு உப்பளம் இயங்கிய காலப்பகுதியில் மாசார் பகுதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஆனையிறவு உப்பளத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளோம்.
தாங்கள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஆனையிறவு உப்பளப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது நாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். மீண்டும் ஆனையிறவு உப்பளம் இயங்கத் தொடங்கவுள்ளதாக நாம் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னராக தற்போது ஆனையிறவு உப்பளப் பணிகள் நாம் எதிர்பார்த்ததைப் போன்று செயற்படாதுள்ளமையானது எமக்கு மிகுந்த மனவேதனையையும் கவலையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
இந்நிலையில் ஆனையிறவு உப்பளம் புதுப்பொலிவுடன் மீண்டும் செயற்படும் காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அத்துடன் குறிஞ்சாத்தீவுப் பகுதியில் விளையும் உப்பே மிகச் சிறந்ததாக இருந்த போதிலும் இற்றைவரை இயங்காதிருப்பதானது எமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது.
எனவே எதிர்காலங்களில் இவற்றை முழுமையாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்கின்றோம் என்றும் அம்மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டினர்.
மக்களின் கோரிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா அவதானத்துடனும் அக்கறையுடனும் செவிமடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் தவநாதன் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|