ஆத்மாவை புனிதமாக்கும் மகாசிவராத்திரி!
Tuesday, February 13th, 2018இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் மனமுருகி, இறைவனை வேண்டி தங்களை துயரமிக்க சூழலில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள். அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில், இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததாகவும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக் குட்டிகளுக்குத் தாயாக வந்து பாலூட்டியதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.
‘எப்போது அதர்மம் அரசாட்சி செய்து தர்மம் அழுகின்றதோ, அப்போது தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழிப்பதற்கு நான் அவதாரம் செய்கின்றேன்’ என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்று ஐந்தொழில்களைப் புரிகின்றார். இவ்வாறு இறைவன் எம்மைப் படைத்து, எம்மில் இருக்கும் தீயகுணங்களை அழித்து எமக்கு அருள் புரிந்து வாழவைக்கின்றார்.
தர்மம் என்றால் என்ன? அதர்ம இருள் சூழ்ந்து மக்கள் இன்னலில் இருக்கின்ற போது, அவர்களை காப்பாற்ற இறைவன் மீண்டும் அவதாரம் எடுப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். உலகில் இவ்வாறு குழப்பம் மிகுந்த சூழ் நிலையையே இருள் என்று கூறலாம். இதை அறியாமை எனக்கூட கூறலாம். கர்மவினைகளில் சிக்குண்டு தவிக்கின்ற எம்மைக் காப்பாற்றுகின்ற தகுதி இறைவனுக்கே உள்ளது. நாம் பிறவிகள் தோறும் செய்த பாவங்களை அழிப்பது மட்டுமல்ல, நாம் புண்ணியங்களைச் செய்து எமது வருங்காலப் பிறவிகளுக்குச் சேர்ப்பதற்கும் இறைவன் உதவி செய்கிறார்.
மகாசிவராத்திரி பரம்பரைபரம்பரையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு அனுஷ்டானம். மகாசிவராத்திரி என்ற பெயர் அகத்துவம் உடையதாக இருப்பதைப் போலவே, முழு உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு பரமபிதா சிவபரமாத்மாவை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது.
பாரததேசத்தில் சிவனுக்கென ஆயிரக்கணக்கில் கோவில்கள் உள்ளன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படாத கோவில்களே இல்லை. வெளிநாடுகளிலும் கூட விதவிதமான பெயர்களில் சிவலிங்கத்திற்கு ஆராதனைகள் நடந்து வருகின்றன.
மாசி மாதம் கடைசி இரவு நேரம். இந்தக் கடும் இரவு காலத்தில்தான் சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் காரணம் அஞ்ஞான இருள் முழுமையாகவே சூழ்ந்திருப்பதைக் குறிப்பதாகும். அஞ்ஞான இருள் காரணத்தால் மனித இனம் துன்பப்படும் போது தர்மம் அதர்மமாகி ஒழுங்கீனம் எங்கும் தலைவிரித்தாடும். அந்த சூழ்நிலையிலேதான் ஞானசூரியனாகிய சிவபரமாத்மா அஞ்ஞான இருள் அகற்றுவதற்காக அவதாரம் செய்து ஞானம் என்னும் ஒளிக்கிரணங்களால் அஞ்ஞானமாகிய இருளை பகலாக மாற்றுகிறார். தீய குணங்களுடன் காணப்படுகின்ற உலகைத் தூய்மையாக மாற்றுவது, விகாரங்கள் நிறைந்த உலகத்தை சத்திய சிவாலயமாக மாற்றவது. கலியுக துக்கமான உலகை மாற்றி சாத்யுக சுகமான உலகை ஸ்தாபனை செய்வது எல்லாம் வல்ல பரமபிதா சிவபரமாத்வாவினுடைய கடமையாகும். கல்ப்பத்தில் இப்போதைய சங்கமயுகத்தில் சிவபரமாத்மா மீண்டும் அவதரித்து அவருடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்.
பரமபிதா பரமாத்மாவாகிய சிவன் ஒளிப்புள்ளியாக விளங்குபவர். இதன் காரணமாக பக்தர்கள் சிவலிங்கத்தின் மீது பால், தயிர், வில்வம் இலை ஆகியவற்றால் அர்ச்சனை செய்கின்றார்கள். அநேக முறை ஸ்நானம் செய்து உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இரவு கண் விழிக்கிறார்கள்.
சிவராத்திரி தினம் அவ்வளவு புனிதமானது. உடல் சுத்தத்தோடு ஆத்மா சுத்தமாக இருக்க வேண்டும். இவ்வாறாக உண்மையான பேரானந்த சுகம் அனுபவிக்க வேண்டும் என்பதே சிவராத்திரியின் அர்த்தம். ஆத்மாக்கள் அனைவரையும் புனிதமாக்கி பரந்தாமம் அழைத்துச் செல்வதற்கு தகுதியுடையவராக்குகிறார். இந்தச் சமயத்தில்தான் ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இனிமையான தொடர்பு கொள்வதோடு, அனுதினமும் வாழ்க்கையானது அவரது அருளினால் நிரம்புவதோடு துன்பங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன. எவ்வளவு தூரம் சிவபரமாத்மாவின் அரளுரைப்பாடி நடக்கின்றோமோ அந்தளவிற்குப் பரமாத்மாவுடான நெருக்கமான தொடர்பை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆத்மாவை ஞானத்தின் மூலம் விழிப்படையச் செய்வதுதான் உண்மையான கண்விழிப்பாகும். இந்தக் கண்விழிப்பின் மூலமாகவே முக்தியும், ஜுவன் முக்தியும் கிடைக்கும். சிவபரமாத்மாவின் அடையாளமாகவே சிவலிங்கம் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.
இவ்வாறான மகிமை பொருந்திய சிவராத்திரி தினமானது ஆத்மாவில் படிந்துள்ள இருள் போன்ற தீயகுணங்களை அகற்றி அவரது அருளினைப் பெறுவதைக் குறித்து நிற்கின்றது. கலியுகத்தின் இறுதி நேரத்தில் அதர்மம் மேலோங்கும் போது, தான் அவதாரம் எடுப்பதாக பகவத்கீதையில் கூறப்பட்டிருப்பது போன்று மங்களகரமான இந்தக் காலத்தில் முழுமுதற்கடவுளான சிவனை நினைத்து ஆத்மாவானது விழிப்படைய வேண்டும். இவ்வாறு ஆன்மா விழிப்படைதலே உண்மையான விழித்தல் என்று கூற முடியும். எவ்வாறு ஒரு இரும்பினை துருப்பிடித்திருக்கின்றதோ அதேபோல் ஆன்மாவையும் தீயகுணங்கள் பிடித்துள்ளன. அவ்வாறு பற்றியுள்ள தீயகுணங்களை சிவபரமாத்மாவினை நினைவு செய்து அந்நினைவென்னும் யோகத் தீயினில் பாவங்களை இட்டு அழிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் பல பிறவிகளில் செய்த பாவவினைகள் அழிக்கப்படுகின்றன. வருடம் ஒன்றுக்கு ஒருநாள் மட்டும் நாம் சிவபெருமானை நினைத்து விழித்திருந்து வணங்கினால் மட்டும் போதாது. ஏனனெனில் பல பிறவிகளில் செய்த பாவத்தினை ஓரிரு நாட்களில் அழித்து முடிக்க முடியாதல்லவா? அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்த சிவபெருமானை நாம் உணர்கின்ற போதும், உறங்குகின்ற போதும், நடக்கின்றபோதும் நினைக்க வேண்டும். இதனால்தானோ என்னவோ ‘நடந்தும் இருந்தும் அவன்தாள் நினை’ என்று சொல்லி வைத்துள்ளார்கள்.
இறைவனை எமது தந்தையாக, தாயாக,குருவாக, ஆசிரியராக, குழந்தையாக, நண்பனாக, உற்ற ,துணையாக, சகோதரனாக அன்பைப் பொழிய வேண்டும். ஏனெனில் நாம் வாழ்க்கையில் இவ்வாறான உறவு முறைகளில் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ளோம். அதனால் இறைவனுடன் இவ்வாறான உறவு முறைகளை ஏற்படுத்தும் போது அவரை மிக இலகுவாக நினைக்கக் கூடியதாக இருக்கும். அது மிகவும் இலகுவாக எமக்கு முன்னிலையில் உள்ள ஒரு நண்பருடன் உரையாடுவது போன்று சர்வவல்லமை பொருந்திய சிவபரமாத்மாவினை எமது அன்பினால் கட்டி வைக்கின்ற போது அவரும் எமக்கு அருள் தருவார். அஞ்ஞான இருள் அகற்றும் சிவராத்திரி தினத்தில் ஞான ஒளியினை ஏற்றுவோமாக!
Related posts:
|
|